You are here

டாக்டர் யாக்கூப்: அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை

  • டாக்டர் யாக்கூப்: அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை

சிங்கப்பூரில் நடக்கவிருக் கும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை என்று தொடர்பு, தகவல் அமைச் சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்து இருக்கிறார். முஸ்லிம் விவகாரங் களுக்குப் பொறுப்பு வகிக் கும் அமைச்சருமான டாக்டர் யாக்கூப், பெரித்தா மிங்கு மலாய் செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்தார். இப்போது அமைச்சரவையில் தாம் பார்க்கும் பணியே தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். “மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொள்கைகள் தொடர்பான பணியை நான் ஆற்றுகிறேன். இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சிறந்த சிங்கப்பூரை உருவாக்கும் மாற்றங்களை என்னால் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த நிலையிலேயே தொடர்ந்து இருந்து வர நான் விரும்புகிறேன்,” என்றார் டாக்டர் யாக்கூப்.

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கவேண்டிய அதிபர் தேர்தல் மலாய்க்காரர் வேட்பாளருக்கான தேர்தலாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தேர்தலில் டாக்டர் யாக்கூப், 61, போட்டியிடக்கூடும் என்று பேச்சு அடிபடுகிறது. நாடாளுமன்றம் சென்ற ஆண்டு நவம்பரில் அரசமைப்புச் சட்டத்தில் பல மாற்றங்களைச் செய்தது. சிங்கப்பூரில் அப்போதைக்கு அப்போது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று புதிய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

அமைச்சர் டாக்டர் யாக்கூப். கோப்புப்படம்