You are here

குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்திய சிறை அதிகாரிகளுக்கு கண்டனம்

  • முகத்தில் முத்திரையுடன் குழந்தைகள். படம்: இணையம்

போபால்: மத்திய பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் திருவிழாவை முன்னிட்டு, சிறையில் இருக்கும் தந்தையைப் பார்க்க வந்த குழந்தைகள் முகத்தில் சிறை அதிகாரிகள் முத்திரை குத்திய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படங்கள் பத்திரிகைகளில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைக்கு அதிகளவு பார்வையாளர்கள் வந்ததால் தவறுதலாக குழந்தைகள் முகத்தில் முத்திரை குத்தப்பட்டது என சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

“ஒரே நாளில் 8,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்தனர். இதனால் குழந்தைகள் முகத்தில் தவறாக முத்திரை குத்தப்பட்டுவிட்டது. கைதிகள் மற்றும் பார்வையாளர்களை வேறுபடுத்திக் காட்ட கைகளில் முத்திரை குத்தப்படுவது வழக்கம்,” என்று அந்த அதிகாரி கூறினார். முத்திரையை முகத்தில் குத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மாநில சிறைத்துறை டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுவர்கள் முகத்தில் முத்திரை குத்தப்பட்டது மனித உரிமை மீறல், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது என அந்த அமைப்புக் கூறியுள்ளது.

முகத்தில் முத்திரையுடன் குழந்தைகள். படம்: இணையம்