You are here

தீவிரவாதிகள் என மூவர் கைது: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

டாக்கா: மிகவும் மோசமான தாக்குதல்களுக்குத் திட்டமிட்ட உள்ளூர் தீவிரவாதக் குழுக்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட பங்ளா தேஷ் போலிஸ், முஸ்லிம் தீவிர வாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் மூவரை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சபாய் நவாப்கஞ்ச் மாவட்டத் தின் வடமேற்குப் பகுதியில் மாந் தோப்பு ஒன்றில் நேற்று அதிகாலை வேளையில் அம்மூவரும் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. அம்மூவரும் டாக்கா காப்பிக் கடையில் கடந்த ஆண்டு 22 பேரைப் பலிகொண்ட தாக்குதல் நடத்திய ‘ஜமாய்துல் முஜாஹிதீன் பங்ளாதேஷ் (ஜேஎம்பி)’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிரடிப் படைப்பிரிவின் தளபதி அப்துல்லா அல் முராட் கூறினார்.

“ஜேஎம்பி அமைப்பைச் சேர்ந்த சுமார் 15 பேர் மாந்தோப்புக்குள் ரகசியக் கூட்டம் நடத்துவது தொடர்பாகத் தகவல் கிடைத்தது. அதனால் தேடுதல் வேட்டையை அதிகாலையில் மேற்கொண்டு மூவரையும் பிடித்தோம்,” என்று கூறிய அவர், அம்மூவர் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும் என்றார். “ஒரு துப்பாக்கி, ரவைகள், சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிமருந்துகள், போராளிகள் தொடர்பான புத்தகங்கள் அவர் களிடம் இருந்தன,” என்றும் அவர் கூறினார்.