You are here

தர்மன்: உடற்குறையுள்ளவர்களுக்கு மேலும் வசதி செய்ய ஆய்வு

வீடமைப்புப் பேட்டைகளில் வேலைவாய்ப்பு மையங்கள் அமைப்பது பற்றி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆராய்ந்து வரும் நிலையில், உடற்குறையுள்ளவர்கள் வேலைப் பயிற்சிக்காக இனி எளிதில் செல்லக் கூடிய சாத்தியம் இருக்கலாம். உடற்குறையுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வழங்குவதற்காகவே இந்த மையங்கள் இயங்கும். ‘ஆடிசம் ரிசோர்ஸ் சென்டர்’ எனும் மனநல பிரச்சினை கொண்டவர்களின் தகவல் நிலையத்தின் 20ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த மையங்கள் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று திரு தர்மன் கூறினார். தினந்தோறும் பிரயாணம் செய்வதை இந்த மையங்கள் எளிமைப் படுத்தும். அனைத்து இடங்களிலும் மையங்கள் அமைக்க முடியாது என்றாலும் சிங்கப்பூரின் இன்னும் பல பகுதிகளில் அமைக்கலாம் என்று அவர் தெரிவித்தார். ரெட்ஹில் பகுதியில் 2005ஆம் ஆண்டு ‘எனேபலிங் வில்லேஜ்’ எனும் நிலையம் அமைக்கப்பட்ட அனுபவத்திலிருந்து அரசாங்கம் இந்த வேலைவாய்ப்பு மையங்கள் அமைப்பது பற்றி ஆய்வு செய்கிறது என்றும் பொருளியல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் உள்ள திரு தர்மன் கூறினார்.