You are here

மூன்று லாரிகள் மோதல்: ஆறு வெளிநாட்டு ஊழியர்கள் காயம்

சாங்கி பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு கனரக லாரிகள், ஒரு சாதாரண லாரி ஆகியவை சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஆறு வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்த படங்கள் இணையத்தில் வலம் வந்தன. அதில் காயமடைந்த ஒருவர் சாலையின் ஓரத்தில் மருத்துவ உதவி பெறுவது தெரியவந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த சாதாரண லாரி திடீரென தனது வேகத்தைக் குறைத்ததால் பின்னால் வந்த ஒரு கனரக லாரி அதன் மீது மோதியது.

அதற்குப் பின் வந்த இரண்டாவது கனரக லாரி முதலாவது கனரக லாரியோடு மோதியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. நேற்று பிற்பகல் நிக்கல் டிரைவை நோக்கிச் செல்லும் தானா மேரா கோஸ்ட் ரோட்டில் நடந்த இவ்விபத்து குறித்து தனக்கு 2.43 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. காயம்பட்ட அறுவரும் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.