You are here

அகதிகளை அனுப்பிவைக்க பங்ளாதேஷ் தயக்கம்: மியன்மார் குற்றச்சாட்டு

யங்கூன்: பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ள 600,000க்கும் மேலான ரோஹிங்யா அகதிகளை மீண்டும் மியன்மாருக்குத் திருப்பி அனுப்பி வைப்பதை பங்ளாதேஷ் தாமதப்படுத்தி வருவதை மியன்மார் சாடியுள்ளது. பல மில்லியன் வெள்ளி அனைத்துலக உதவி நிதி வருவதைப் பெற்றுகொள்வதற்காகவே இவ்வாறு தாமதப்படுத்துவதாக மியன்மார் குற்றம் சாட்டியுள்ளது. 1990ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரோஹிங்யா மக்களை மீண்டும் மியன்மாருக்குள் ஏற்றுக்கொள்வது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மீண்டும் அகதிகளை ஏற்றுகொள்வதற்கான முறையை தொடங்க மியன்மார் தயாராக இருப்பதாக மியன்மாரின் தலைவர் ஆங் சான் சூ சீயின் பேச்சாளர் திரு சாவ் டே தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பங்ளாதேஷ் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அதனால் தாமதம் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்துலக சமூகம் ரோஹிங்யா மக்களுக்காக பெரிய அளவில் அகதிகள் முகாம்களைக் கட்டுவதற்காக நிதி திரட்டிக் கொண்டிருப்பதே பங்ளாதே‌ஷின் தயக்கத் திற்குக் காரணம் என்றும் திரு சாவ் டே கூறியுள்ளார். “இதுவரை $544.44 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டு பங்ளாதே‌ஷுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பெற்றுள்ளதால் அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு பங்ளாதேஷ் தயக்கம் காட்டுகிறது,” என்று ‘குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ செய்தித்தாளின் முதல் பக்கத்தில் நேற்று திரு டேயின் கருத்துகள் வெளிவந்தன.