You are here

டிரம்ப்பின் ஆலோசகர்கள் மூவர் மீது குற்றச்சாட்டு

வா‌ஷிங்டன்: திரு டோனல்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர், டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர்கள் மூவர் மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரிப்பதற்காக அமெரிக்க புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் தலைமையில் கடந்த மே மாதம் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் விசாரணை தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. திரு டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர்கள் மூவர் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் முன்னாள் பிரசாரக் குழுத் தலைவர் பால் மனஃபோர்ட், அவரின் உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகிய இருவர் மீதும் பண மோசடி, சதித்திட்டம் உள்ளிட்ட 12 குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக திரு முல்லர் அறிவித்துள்ளார். வா‌ஷிங்டனில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான பால் மனஃபோர்ட்டும் ரிக் கேட்ஸும் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ள வில்லை.

அவ்விருவரும் பிணையில் விடு விக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவ்விருவருக்கும் தலா 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக டிரம்ப்பின் முன்னாள் பிரசாரக் குழு ஆலோச கரான ஜார்ஜ் பாப்படோப்புலாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.