You are here

தடுப்பு முகாமிலிருந்து 150 அகதிகளை ஏற்றுக்கொள்ள முன்வந்த நியூசிலாந்து

வெலிங்டன்: பாப்புவா நியூகினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் மூடப்பட்டதையடுத்து அங்கிருந்து வெளியேற மறுக்கும் 600 அகதிகளில் 150 பேரை நியூசிலாந்து ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை நாளை சந்திக்கவிருக்கும் ஆர்டன், இது குறித்து பேசவிருப்பதாக மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார். அகதிகளை ஏற்றுக்கொள்வதால் ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பிரச்சினையிலிருந்து சற்று விடிவு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார். பாப்புவா நியூகினியில் நிகழ்ந்து வரும் பிரச்சினையை மனிதாபிமான அவசர நிலைப் பிரச்சினையாக ஐநா மன்றம் இந்த வாரம் வகைப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, பாப்புவா நியூகினியில் உள்ள அகதிகளின் உணவு, குடிநீர், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை என்று ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.