You are here

ஜப்பானில் அதிபர் டிரம்ப்

  • படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது 12 நாள் ஆசியப் பயணத்தை இன்று தொடங்குகிறார். பயணத்தின் முதல் கட்டமாக அவர் இன்று காலை ஜப்பான் தலைநகர் தோக்கியோ சென்றுள்ளார். ஜப்பானுடன் இணைந்து வட கொரியப் பிரச்சினைக்கு ஒருமித்த கூட்டணியை அமைப்பதை டிரம்ப் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிலவி வருகிறது. வடகொரியாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள ஆசியாவில் கூட்டணி நாடுகளின் ஆதரவை நாடுவதில் அதிபர் டிரம்ப் முக்கியமாக கவனம் செலுத்துவார். வட்டாரத்தின் பாதுகாப்புக்கு கூட்டாக முயற்சி எடுப்பதன் அவசியம் பற்றி யொகொடா விமானப் படைத் தளத்தில் வந்து இறாங்கியவுடன் அமெரிக்க ஜப்பானிய படைகளுடன் அதிபர் டிரம்ப் பேசுவார்.

பின்னர் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயுடன் அவர் கோல்ஃப் விளையாடுவார். இவ்வாண்டின் முதல் பகுதியில் இரு தலைவர்களும் ஃபுளோரிடா வில் கோல்ஃப் விளையாடினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாசாகா அரண்மனையில் அரச குடும்பத்தின் அழைப்பில் டிரம்ப் வரவேற்கப்படுவார். வடகொரியாவால் கடத்திச் செல்லப்பட்ட ஜப்பானியர்களின் குடும்பங்களை டிரம்ப்பும் அபேயும் சந்திப்பார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆசியப் பயணத்தின் போது ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளுக்கு டிரம்ப் செல்லவிருக்கிறார். 1992ஆம் ஆண்டுக்குப் பின் அமெரிக்க அதிபர் ஒருவரின் ஆக நீண்ட ஆசியப் பயணமாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாயி தீவில் யூஎஸ்எஸ் அரிசோனா நினைவிடத்திற்குச் சென்று இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களால் தாக்கப்பட்ட பெர்ல் ஹார்பரில் மரணமடைந்தவர்களுக்கு நேற்று டிரம்ப்பும் அவரது மனைவி மெலானியாவும் அஞ்சலி செலுத்தினர். படம்: ஏஎஃப்பி