You are here

ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்திலுள்ள விமான நிலையத்தைக் குறிவைத்து ஏமனிலிருந்து வீசப்பட்ட ஏவுகணையை சவூதி விமானப் படையினர் இடைமறித்து அழித்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே அந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதால் உயிரிழப்பு சேதம் தவிர்க்கப்பட்டதாக சவூதி அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சி தெரிவித்தது.

ஏவுகணையின் உதிரிப் பாகங்கள் அந்த விமான நிலையத்திற்கு அருகே உள்ள திடலில் விழுந்ததாகவும் அதனால் விமானப் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் தொலைக்காட்சித் தகவல் தெரிவித்தது. ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் அங்குள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவூதி அரேபியா சண்டையிட்டு வருவதால் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவூதி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.