You are here

ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு அபாயம்

அரசாங்கத்தின் நீரிழிவு அபாய மதிப்பீட்டுச் சோதனையில் பங்கேற்றோரில் ஐந்தில் ஒருவர் நீரிழிவால் பாதிக்கப்பட அதிக அபாயமிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இணையவழி நீரிழிவு அபாய மதிப்பீடு மூலம் இது வரை 44,000 பேர் தாங்கள் நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயமுள்ளதா என்று சுய மதிப்பீடு செய்துகொண்டனர். அவர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினருக்கு, அதாவது 8,500 பேருக்கு நீரிழிவு அபாயம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவரின் உயரம், எடை, அவர் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார் என்பது போன்ற கேள்விகள் அந்த மதிப்பீட்டில் அடங்கியுள்ளன.

ஒருவர் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அவருக்கு நீரிழிவு அபாயமிருக்கிறதா என்பது தீர்மானிக்கப்படும். “நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமுள்ளவர்கள் நீரிழிவுப் பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அதைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையை நாடுமாறும் அறிவுறுத்தப் படுவர்,” என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். 40 அல்லது அதற்குமேல் வயதுடையோர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிழிவுப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.