You are here

அதிபர் டிரம்ப்: பேச்சு நடத்த வடகொரியா முன்வர வேண்டும்

சோல்: வடகொரியா பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்றும் அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று தென்கொரியா வந்துசேர்ந்த திரு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் சோல் நகரில் செய்தி யாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார். திரு டிரம்ப் இதற்கு முன்னதாக வடகொரியாவுக்கு எதிராக கடுமையான சொற்களால் மிரட்டல் விடுத்து வந்தார்.

இந்நிலையில் தென்கொரிய வருகையின்போது திரு டிரம்ப், வடகொரியா பேச்சு நடத்த முன் வந்தால் அந்நாட்டுக்கு மட்டுமல்ல; உலகில் உள்ள அனைவருக்குமே நன்மை பயக்கும் என்று கூறினார். வடகொரியாவுக்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்தப் போவதில்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பேச்சு நடத்த வடகொரியா முன்வர அந்நாட்டை சீனாவும் ரஷ்யாவும் நெருக்க வேண்டும் என்று திரு டிரம்ப்பும் திரு மூனும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒரு நாள் பயணமாக நேற்று தென்கொரியா சென்று சேர்ந்த அதிபர் டிரம்ப்பிற்கு அங்கு ராணுவ மரியாதை அணிவகுப்புடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. திரு டிரம்ப்பை வரவேற்க தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ராணுவத் தளத்திற்கு திடீர் வருகை புரிந்தார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளை திரு டிரம்ப் நேற்று சந்தித்துப் பேசினார். திரு மூனுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து திரு டிரம்ப் பேச்சு நடத்தியுள்ளார். வட கொரியாவின் மிரட்டல் குறித்தும் அதற்கு தீர்வு காணும் வழிகள் குறித்தும் அவ்விரு தலைவர்களும் கலந்து ஆலோசித்ததாகக் கூறப் பட்டது. அ மெ ரி க் கா - தெ ன் கொ ரி யா தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த புதிய விதிமுறைகள் குறித்தும் ராணுவத் தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் திரு டிரம்ப் தென் கொரிய அதிபருடன் பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்க வீரர்களையும் திரு டிரம்ப் சந்தித்துப் பேசினார்.