You are here

லிட்டில் இந்தியாவில் களைகட்டவிருக்கும் கலை விழா

சுதாஸகி ராமன்

பூக்கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றுடன் ஆலயங்கள், பள்ளிவாசல் போன்ற வழிபாட்டுத் தலங்களாலும் நிரம்பி வழியும் லிட்டில் இந்தியா மீண்டும் கலை சார்ந்த நடவடிக்கைகளால் களை கட்டவிருக்கிறது. ‘ஆர்ட் வாக் லிட்டில் இந்தியா’ எனும் வருடாந்திர கலை விழா, சிங்கப்பூர் கலை வாரத்தையொட்டி நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை லாசால் கலைப் பள்ளி, சிங்கப்பூர் பயணத்துறை வாரியம், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்தக் கலை விழா ‘நகர்ப்புறப் புராணக் கதைகள்’ எனும் கருப்பொருளைக் கொண் டது.

கலை வாரத்தையொட்டி சிறப்பு சுவரோவியங்கள் அந்தப் பகுதியை அலங்கரிக்கவுள்ளன. வியாழக் கிழமை முதல் சனிக்கிழமை வரை கதை நேரம், நாடகங்கள் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். கடைவீடுகளின் சுவர்களை பெரிய ஓவியங்கள் அலங்கரிக்க, லிட்டில் இந்தியாவின் தெருக்களில் நடன, நாடக நிகழ்ச்சிகள் அரங் கேறும். இக்கலைகளின் மூலம் கலைஞர்கள் லிட்டில் இந்தியாவைப் பற்றிய மர்மக் கதைகளைக் கூற உள்ளனர். விழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தின் கிளைவ் சாலை, டன்லப் சாலை, கேம்பல் லேன் போன்ற இடங்களில் ஏழு சுவர் ஓவியங்களும், மூன்று மேடை நிகழ்ச்சி அங்கங்களுடன் மரு தாணி இடுதல், யோகாசன வகுப்பு கள் போன்றவையும் இடம்பெறும்.