You are here

இளையரின் பார்வையில் அறம்

  • அஸ்வினி செல்வராஜ்

அஸ்வினி செல்வராஜ்

இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு கருப்பொருளாக அமைந்திருந்த தமிழ்ச் சொல் ‘அறம்’. உச்சரிப்பிலேயே கேட்பவருக்கு உரம் ஊட்டும் இச்சொல்லின் அடிப்படை பொருள் ஒன்றுதான். ஆனால், வெவ்வேறு வாக்கியங்களில் இச்சொல் பயன்படும்போது, சூழலுக்கு ஏற்ற பொருளைத் தருகின்றது. பயன்படுத்தப்படும் சூழலுக்கு ஏற்ற பொருளை அளிப்பதுபோல, ஒரே நிலையில் தேங்கிவிடாமல் தொடர்ந்து மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு பல நிலைகளில் அறமும் மாற்றம் காண்கிறது என்ற ஒருமித்த கருத்தானது இளையர்களிடையே நிலவுகிறது என்பது, எழுத்தாளர் விழாவில் நடந்த கலந்துரையாடல்களிலிருந்தும் நிகழ்ச்சிகளிலிருந்தும் புலப்பட்டது.

சமூகச் சிந்தனையில் காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அறத்தைப் பற்றிய இளைய தலைமுறையினரின் பார்வையை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த இருவார கால எழுத்தாளர் விழாவின் முதல் தமிழ் நிகழ்வாக நடைபெற்ற இசையுடன் கூடிய கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் கவிதை வாசித்த நான்கு இளையர்களின் படைப்புகளிலும் இந்த சிந்தனையின் வெளிப்பாடு காணப்பட்டது. அறம் என்பது பொதுவாகவே அனைவருக்கும் நல்லது செய்து வாழ்தல் என்பதை இளையர்கள் மறுக்கவில்லை. மாறாக, சமூக அறம், தனி மனித அறம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளை இக்கவிதைகள் எழுப்பின. அத்துடன், சமூக அறத்திற்காக தனிமனிதனுக்கான அறத்தை புறக்கணிப்பது அறமாகுமா என்பதை ஆராயும் வகையிலும் இக்கவிதைகள் எழுதப்பட்டிருந்தன.

மேலும், சிங்கப்பூர் இலக்கியத்தில் அறம் என்ற கருத்தரங்கில் இளையர்கள் அறம் குறித்து எழுப்பிய கேள்விகளும், முந்தைய தலைமுறையினரின் அறம் குறித்த பார்வையிலிருந்து வேறுபட்டதாக உள்ளதென்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தன. உதாரணத்திற்கு, சென்ற தலைமுறையினரை சேர்ந்தவர்களுக்கு பெண்கள் விவாகரத்து பெறுவதென்பது அறமாகாது. எத்தனை துன்பங்களை எதிர்கொண்டாலும் குடும்ப நலனிற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் அவர்களின் அறமாக இருந்தது.