You are here

மருத்துவக் கட்டணங்கள்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டுவாக்கில் மருத்துவக் கட்டண வழிகாட்டி முறைகள் வெளியிடப்பட உள்ளன. ஒரு பத்தாண்டுக்கு முன் சிங்கப்பூர் மருத்துவ சங்கம் வெளியிட்ட மருத்துவக் கட்டண வழிகாட்டிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் அப்படியொரு வழிகாட்டி வெளியிடப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் வெளியிடப்பட்ட வழிகாட்டி, போட்டித்திறனுக்கு ஒவ்வாதது என்று கருதப்பட்டதால், அது மீட்டுக்கொள்ளப்பட்டது.

அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ள உத்தேச வழிகாட்டி முன்னைய சிக்கல்களைப் போல இடர்களுக்கு இடந்தராது என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். அந்த வழிகாட்டியின்படி நோயாளிகள் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் பற்றித் தெரிந்துகொள்ளவும் மருத்துவர்கள், தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நியாயமான கட்டணம் பற்றி முடிவெடுக்கவும் முடியும். அந்த வழிகாட்டிகளின்படிதான் மருத்துவர்கள் தங்கள் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்கள் சொந்த கட்டணத்தை நிர்ணயிக்கவும் முடியும் என்பதையும் அமைச்சர் எடுத்துக்கூறினார்.

ஆனால், அதே வேளையில் தங்களுக்கு அந்த வழிகாட்டிகளில் குறிப்பிடப்படும் தொகையைக் காட்டிலும் கூடுதலாக செலுத்த வேண்டியிருப்பதாக நோயாளிகள் கருதினால் அது குறித்து மருத்துவர்களிடமோ, மருத்துவ நிறுவனங்களிடமோ விசாரிக்க முடியும்.

குடியரசில் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் கூடுதலான மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இந்த தருணத்தில் புதிய வழிகாட்டி மூலம் நோயாளிகள் பல வகைகளில் பயன் அடைய முடியும்.

சுகாதார அமைச்சு ஒவ்வொரு மருத்துவ சிகிச்சை முறைக்கும் ஆகக்கூடிய செலவுகள் பற்றி வெளிப்படையாகவே இதுகாறும் தெரிவித்து வந்துள்ளது. சில தனியார் மருத்துவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் இரட்டிப்பான அல்லது அதனிலும் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதும் உண்டு. சிங்கப்பூர் மருத்துவ மன்றம் வழிகாட்டிகளை வெளியிட்டிருந்த காலகட்டத்திலும் சில கட்டணங்கள் மிகையாகவே இருந்தன.

இதற்கிடையே சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் டாக்டர் வோங், கட்டண வழிகாட்டி நிறைவு தருவதாக இல்லாது போனாலும் அது வலிமை மிக்கதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மருத்துவமனைக் கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,பொதுமக்களுக்கு சுகாதாரச் சேவைகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் காப்புறுதிக் கட்டணங்களும் உதவிகளும் ஏற்புடையவையாக சீராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியரசின் சுகாதார அமைச்சு, சுகாதாரக் கவனிப்பை நல்ல முறையிலும் கட்டுப்படியாகக் கூடிய வகையிலும் வைத்திருக்க அமைச்சின் உத்தி பேருதவியாக இருக்குமென்பது உறுதி.

நோயாளிகள் இனி கூடுதலான காப்புறுதிக் கட்டணங்களைச் செலுத்தாமல் இருக்கவும் அமைச்சு காப்புறுதி நிறுவனங்களுடன் கலந்து பேச்சு நடத்தி வருகின்றது. நோயாளிகளுக்குத் தொடர்ச்சியான சுகாதார சேவைகளும் கிடைக்கவேண்டும் என்பதும் முக்கியமான அம்சமாக இருக்கின்றது.

குடியரசின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கவும் நோயாளிகளின் குறைபாடுகளைச் சரிசெய்யவும்சுகாதார அமைச்சின் யோசனைகள் பயனளிக்க முடியு மென்று உறுதியாக நம்பலாம். வெளிப்படையான கட்டண அறிவிப்புகள், நோயாளிகளுக்குப் பல்வேறு உதவிகள், காப்புறுதி நிறுவனங்களின் உதவிக்கரம் ஆகியவை கட்டாயம் பயன்தரமுடியுமென்று சிங்கப்பூரர்கள் நம்பலாம். நோயாளிகளைப் பொறுத்தவரையில் அது சமூக உதவியா சுகாதாரக் கவனிப்பா என்று கருதமாட்டார்கள். அவர்களுக்குத் தங்கள் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள எப்போதும் உதவி கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். நோயாளிகள் நோய்கள் பற்றித் தெரிந்துகொள்ள அரசாங்கம் நடத்தும் இயக்கங்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துவரும். சுகாதாரச் செலவுகளைக் கட்டுக்கோப்பில் வைத்திருக்கவும் அது உதவும்.