You are here

தோ பாயோ குடியிருப்பில் தீ; 70 பேர் வெளியேற்றம்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோ பாயோவில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் நேற்றுக் காலை நிகழ்ந்த தீ விபத்தில் அவ்வீட்டின் வசிப்பறை முழுவதும் தீக்கிரையானது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. தோ பாயோ லோரோங் 5, புளோக் 45ன் 15வது தளத்தில் அந்த வீடு அமைந் துள்ளது. தீ விபத்துக்குமுன் அவ்வீட்டில் இருந்து வெடிப்புச் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித் தனர். சம்பவம் குறித்து காலை 9.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. வீட்டில் யாரும் இல்லாதபோது தீப்பிடித்ததால் தீயணைப்பு வீரர்கள் வேறு வழியின்றி பலவந்தமாக உள்ளே நுழைய நேரிட்டது. இரு குழாய்கள் மூலம் நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் குறிப்பிட்டார். தீ விபத்தைத் தொடர்ந்து அந்த புளோக்கில் இருந்து கிட்டத்தட்ட 70 பேரை போலிசாரும் குடிமைத் தற்காப்புப் படையின ரும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தீப்பற்றியதற்கான காரணம் தெரிய வில்லை. விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்தின்போது அந்த வீட்டிற்கு நேர் மேலே 16வது தளத்தில் இருக்கும் தமது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார் 22 வயது மாணவியான குமாரி அட்டிகா மிஸ். வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததாலும் பிளாஸ்டிக் எரிவது போன்ற கடும் நெடியை உணர்ந்ததாலும் அவர் கண்விழித்தார். தீயின் உக்கிரத்தால் தமது வீட்டின் சுவர்களில் இருந்து வண்ணப்பூச்சு உருகத் தொடங்கியதாகவும் அங்கு நிற்கவே முடி யாதபடி அதிக வெப்பமாக இருந்ததாகவும் அவர் சொன்னார். காலை 10.38 மணிக்கு 14வது தளம் மற்றும் அதற்குக் கீழுள்ள தளங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடு களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டில் ஒருவரும் இல்லாதபோது தீப்பிடித்ததால் உயிருடற்சேதம் இல்லாமல் போனது. இருந்தாலும் வசிப்பறை முழுவதும் தீக்கிரையானது. (உள்படம்) அதே புளோக்கில் உள்ள தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி தரைப்பகுதியில் தஞ்சமடைந்த குடியிருப்பாளர்கள். படம்: சாவ் பாவ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்