You are here

‘உன்னத மனிதர்கள் உள்ளனர்

திரையுலகில் உன்னத மனிதர்கள் சிலர் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் இளம் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், திரைத்துறையில் உள்ள ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றம் சொல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். “ஒருசிலர் நடிகைகளிடம் சிலவற்றை எதிர்பார்க்கின்றனர் என்றால் அவர்களுக்கு சில பெண்கள் ஒத்துழைத்திருக்கவேண்டும். அதனால், எல்லோரும் அப்படி ஒத்துழைப்பார்கள் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு கைகள் இணைந்தால்தானே ஓசை வரும்? “இது 2018ஆம் ஆண்டு. இப்போது திரைத்துறைக்கு நிறைய நடிகைகள் வந்துவிட்டனர். அவர்களில் பலரும் வெற்றி நாயகிகளாக உள்ளனர். அதுவும் யாருடைய நிர்பந்தத்துக்கும் அடிபணியாது தங்களை நிலை நாட்டியுள்ளனர். அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார் ஸ்ருதி ஹரிஹரன். ஆணாதிக்கம் ஒழிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய நல்லுள்ளம் கொண்ட ஆண்களும் குரல் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.