You are here

சமூக ஊடகத்தில் கோலோச்சும் சமந்தா

திருமணமான அன்றே தமது படுக்கை அறையில் ‘செல்ஃபி’ எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றி புகுந்த வீட்டாரின் அதிருப்தியை எதிர்கொண்டாலும் சர்ச்சைக்குரிய படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதை சமந்தா நிறுத்திவிடவில்லை. கணவரோடு தற்போது மாலத்தீவில் தேனிலவு கொண்டாடிவரும் சமந்தா நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவேற்றினார். அதனைப் பார்த்த அவரது ரசிகர்கள், “திருமணமான ஒரு பெண் இப்படி அரைகுறை உடையுடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றலாமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சமந்தா, “நான் என்ன செய்யவேண்டும் என்ற விதிமுறையை நான்தான் முடிவுசெய்வேன்,” என்று பதிலளித்துள்ளார்.

அது ஒருபுறமிருக்க, தெலுங்கில் ராம்சரணுடன் சமந்தா இணைந்து நடித்துவரும் ‘ரங்கஸ்தலம்’. படத்தில் சமந்தா இடம்பெற்ற காட்சிகளைக் கொண்ட முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 1985ல் நடக்கும் கிராமத்துக் கதையான இதில் சமந்தா மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்திருக்கிறார் சமந்தா. சென்ற மாதம் 24ஆம் தேதி இந்தப் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது. அதில் சமந்தா தொடர்பான எந்தவொரு புகைப்படமோ, காட்சியோ இல்லை. இந்தப் படத்தில் சமந்தாவின் தோற்றம் ஏற்கெனவே புகைப்படங்களாக இணையத் தளங்களில் வெளியாகி இருந்தாலும் முன்னோட்டக் காணொளியில் அவரைப் பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு ‘ரங்கஸ்தலம்’ படத்தின் முதல் முன்னோட்டக் காணொளி அதிருப்தியை ஏற்படுத்தியது.