You are here

வதந்தி பரப்புவதாக ஓவியா வேதனை

தன்னைப் பற்றி யாரோ தவறான தகவல்களைத் திட்டமிட்டு பரப்பி வருவதாகப் புலம்புகிறார் ஓவியா. வேறொன்றுமில்ல... ‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஓவியாவின் மவுசு கோடம்பாக்கத்தில் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’, விமலுடன் ‘களவாணி-2’, சிம்பு இசை அமைக்கும் ‘90 எம்எல்’ படங்களில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் சிம்பு படத்தில் ஓவியா ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து அண்மையில் சில தகவல்கள் வெளியாகின.

அது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்குள் ஓவியா தன் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் கடும் எரிச்சலில் இருக்கிறாராம் அம்மணி. காரணம் அவர் தன் சம்பளத்தை சிறிதளவும் உயர்த்தவில்லை என்பதுதான். “வேண்டும் என்றே என்னைப்பற்றி யாரோ தவறான செய்தியைப் பரப்பி உள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறுவது தவறான தகவல். நான் எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று சொல்வதே இல்லை. “குறிப்பாக ‘களவாணி-2’ படத்தில் நடிக்க நான் அதிக சம்பளம் கேட்டதாகவும் இதனால் வேறு ஒரு நடிகையை அந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என்றும் வதந்தியை பரப்பிவிட்டார்கள். ஆனால் இப்போது அந்தப் படத்தில் நான்தான் நடிக்கிறேன்,” என்கிறார் ஓவியா.