You are here

சிரியா படையினரால் போராளிகள் சுற்றிவளைப்பு

டமாஸ்கஸ்: சிரியாவின் கூட்டா மாநிலத்தின் பிரதான நகரான டூமாவை அந்நாட்டின் ராணுவப் படை தனிமைப்படுத்தியுள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகப் போராடி வரும் போராளிகள் தற்போது தளமாகக் கொண்டிருக்கும் டூமாவிலிருந்து அவர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி ராணுவப் படை சுற்றிவளைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, டூமா நகருக்குள் ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், மருந்து ஆகிய வற்றைக் கொண்டு செல்ல முடியாத நிலையை ராணுவப் படை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போராளிகள் மட்டு மின்றி பொதுமக்களும் பெரும் அளவில் பாதிக்கப்படுவர் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் டமாஸ்கசுக்கு மிக அருகில் இருக்கும் கூட்டா மாநிலத்தின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் சிரியா ராணுவப் படை தாக்குதலை நேற்று தீவிரப்படுத்தியது. கடந்த 20 நாட்களாகப் போராளிகளுக்கும் ராணுவப் படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மடிந்துள்ளனர்.

சிரியாவின் போர் விமானங்கள் பொழிந்த குண்டு மழையால் ஏற்பட்ட பெருத்த சேதத்தைப் பார்க்கும் டூமா நகரவாசிகள். படம்: ஏஎஃப்பி