You are here

‘எனக்கு திருமணம் நடக்குமா?’

கவுதம் கார்த்திக் தன்னுடைய திரையுலக அனுபவத்தைப் பற்றியும் தற்பொழுது நடித்து வரும் படங்களைப் பற்றியும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திரையில் அதிகம் சாதிக்கவேண்டி இருப்பதால் திருமணத்தில் தற்பொழுது விருப்பம் இல்லை. திருமணம் என்று ஒன்று நடக்குமா என்று தெரியவில்லை,” என்று மனம்திறந்து பேசினார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து எந்த மாதிரி படம்?

“இந்தப் படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் நகைச்சுவை கலந்த பேய்ப் படம். குறிப்பிட்ட ரசிகர்களை மனதில் வைத்தே இந்தப் படத்தை எடுத்துள்ளோம். கல்லூரி மாணவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இப்படத்தில் உண்டு. ‘ஹரஹர மகாதேவகி’ படம் பிடிக்கவில்லை என்றால் இந்தப் படமும் பிடிக்காது.” முந்தைய படத்தைப் போலவே இரட்டை அர்த்த வசனங்கள் இந்தப் படத்திலும் உண்டா?

“இரட்டை அர்த்த வசனங்கள், ‘ஹரஹர மகாதேவகி’ படத்தில் இருந்திருக்கலாம். இந்தப் படத்தில் அனைத்துமே நேரடியாகத்தான் பேசியிருக்கிறோம்.”

விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி?

“நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு விஷயம் கற்றுக்கொள்வேன். ‘ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’ படத்தில் விஜய் சேதுபதியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் நடிப்பதே எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. உண்மையில் அவர் எனக்கு அண்ணனாகவே மாறிவிட்டார்.”

‘மிஸ்டர் சந்திரமவுலி’ படம் எந்தக் கட்டத்தில் உள்ளது?

“‘சந்திரமவுலி’ படம் முடியும் நிலையில் உள்ளது. என் அப்பா கார்த்திக்தான் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடித்து உள்ளார்.”

அப்பா கூட நடித்தது பயமாக இருந்ததா? “துவக்கத்தில் பயமாகத்தான் இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. படத்தில் நடிக்கும்போது எந்த அறிவுரையும் அவர் கூறியது இல்லை. ஆனால் நேரடியாகச் சொல்லாமல் பல விஷயங்களை நடிப்பிலேயே சொல்லியுள்ளார்.”

நண்பர்களைப் பற்றி?

“திரையில் நடிக்க வந்த பின் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைத்தால் வாழ்க்கை அழகாகும் என்பார்கள். மெல்வின், டேனியல், லல்லு, சித்தார்த் இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்கள்.”

திருமணம் எப்போது?

“திருமணத்தைப் பற்றி நானோ என் வீட்டிலோ யாருமே யோசிக்கவில்லை. முதலில் நன்றாக நடித்து சம்பாதிக்கவேண்டும். அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். எனக்குக் கல்யாணம் ஆகுமா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அப்படித் திருமணமானால் அது காதல் திருமணமாகவும் பெற்றோரின் சம்மதத்துடனும்தான் நடக்கும். அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்,” என்று கூறினார் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்.