You are here

மூத்த நடிகருடன் இணையும் தமன்னா

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த தமன்னா தற்பொழுது தந்தை வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘பாகுபலி’ படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டாத ஆட்களே இல்லை. அதனால் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.

அதனால், மனதைத் தேற்றிக்கொண்டு கிடைக்கும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா. தற்போது ‘குயின்’ படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். அனில் ரவிபுடி இயக்குநர் வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோரை வைத்து தெலுங்கு படம் ஒன்றை எடுக்கிறார். அந்தப் படத்திற்கு ‘எஃப் 2: ஃபன் அன்ட் ஃபிரஸ்டிரேஷன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘எஃப் 2’ படத்தில் வெங்கடே‌ஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன்னா வெங்க டே‌ஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை. கதையைக் கேட்டதும் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம் தமன்னா.

‘எஃப் 2’ படத்தில் இரண்டு நாயகிகள். இரண்டாவது நாயகனான வருண் தேஜுக்கு மெஹ்ரீன் பிர்சாதா ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இதுவரை பார்த்திடாத அளவுக்கு நகைச்சுவைக் காட்சிகள் இருக்கின்றனவாம். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நடிகை தமன்னா 12 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நீடித்து வருகிறார். இறுதியாக விக்ரம் ஜோடியாக நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது 3 தெலுங்கு படங்களிலும் ஓர் இந்தி படத்திலும் நடிக்கிறார். அதில் ஒன்று சிரஞ்சீவி நடித்து வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.