You are here

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் காஜல்

தெலுங்குத் திரையின் முன்னணி நடிகராக இருந்த என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும் திரை நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் அவரது மகன் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அண்மையில் இந்தப் படத்திற்கு பூசை போடப்பட்டது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ஜெயலலிதா தெலுங்கில் என்.டி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளார். இளமைக் கால ஜெயலலிதா வேடத்திற்காக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். பாலகிருஷ்ணாவுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிப்பதுபோல் அவரது காட்சிகள் இடம்பெற உள்ளதாகவும் பட வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தைத் தேஜா இயக்குகிறார். என்.டி.ஆர். தனது இளமைக் காலத்தில் சென்னையில் அரசு பணியில் இருந்தார். அந்தப் பணியை அவர் ஒரு மாதம்தான் செய்தார். பின்னர் திரையில் நடிக்க வாய்ப்பு வந்ததும் அரசு பணியை விட்டுவிட்டார். இந்தக் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.