You are here

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்க முயன்ற அமெரிக்கருக்குச் சிறை

அமெரிக்காவைச் சேர்ந்த மோசடிக்காரர் ஒருவருக்குச் சிங்கப்பூர் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. வெளிநாட்டில் மோசடி செய்த ஒருவர், சிங்கப்பூரில் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவதற்காக இங்கு கைது செய்யப்பட்டது முதல் முறை என நம்பப் படுகிறது. 53 வயது டேவிட் ஜான் பிளேட்டும் அவருக்கு உடந்தையாக இருந்த 56 வயது சந்திரசேகரன் வாசிமுத்தும் அம்மோசடியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 2014 ஜூலையில், பிரிட்டனைச் சேர்ந்த 50 வயது பாடகர் பாடலாசிரியர் திருவாட்டி மேரி ஹோலடே லமாரை பிளேட் ஏமாற்றி $600,000 பணம் வாங்கினார்.

அந்தப் பணம், குளோபோமாஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் என்றும் 30% வட்டியுடன் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்றும் பிளேட், திருவாட்டி லமாரிடம் பொய்யுரைத்தார். அதனால் திருவாட்டி லமார், கிட்டத்தட்ட நொடித்துப்போன நிலைக்கு ஆளானார். பிளேட், அந்தப் பணத்தை பிரிட்டனைச் சேர்ந்த கேப்டிவ் ரிஸ்க் என்ற நிறுவனத்திடம் கொடுத்து, அதை மூன்று வங்கிக் கணக்குகளுக்குப் பிரித்து அனுப்பும்படி அறிவுறுத்தினார். அதில் ஒரு கணக்கு, சிங்கப்பூரிலுள்ள திரு சந்திரசேகரனின் ‘அகுளோபல் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தினுடையது. தகவல் அறிந்த திருவாட்டி லமார் இங்கு வந்து போலிசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து, பிளேட், 2017 பிப்ரவரி 23ல் சிங்கப்பூருக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.