மகாதீரின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்தனர்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அவரது வலைப் பதிவில் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் போலிசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்று போலிஸ் அதிகாரிகள் நேற்று திரு மகாதீரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்ததாகவும் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய போலிசார் அரை மணி நேரம் செலவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த விசாரணையின்போது ஐந்து வழக்கறிஞர்கள் திரு மகாதீருடன் இருந்ததாகத் தெரிகிறது. தமது வலைப்பதிவில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலிசார் பல கேள்விகளைக் கேட்டதாகவும் ஆனால் தான் எந்தக் கேள்விக்கும் பதில் கூறவில்லை என்றும் திரு மகாதீர் கூறினார். “என் மீது குற்றம் சாட்டப்பட்டால் நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பேன் என்று போலிசாரிடம் கூறினேன்,” என்று மகாதீர் செய்தியாளர்களிடம் கூறினார்.