கூட்டணிக்காக அவசரப்படவில்லை என்கிறார் இல.கணேசன்

மதுரை: மற்ற கட்சிகள் இன்னும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யாத நிலையில், தமிழக பாஜக இது தொடர்பாக அவசரப்பட வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதை அனைவரும் பேசி முடிவு செய்ய இருப்பதாகவும் மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“பல கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னமும் இறுதி செய்யவில்லை. மக்கள் நலக் கூட்டணி தங்கள் அணிக்கு மேலும் சில கட்சிகள் வருமா என எதிர்பார்த்துள்ளது. திமுகவும் காங்கிரஸ் தவிர மேலும் சில கட்சிகளைத் தங்கள் அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
“கூட்டணி அமைக்கப்போவதில்லை என அதிமுக இதுவரை அறிவிக்கவில்லை. எனவே பாஜக கூட்டணி குறித்து அறிவிக்க அவகாசம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,” என்றார் இல.கணேசன்.