புக்கிட் பாஞ்சாங் அடுக்குமாடி வீடு ஒன்றில் சென்ற வாரம் சாம்சங் துணிதுவைக்கும் சாதனம் ஒன்றில் தீ பிடித்தது. இதற்கு மின்கசிவே காரணம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் அதனுடைய துணிதுவைக்கும் சாதனத்தில் நிகழ்ந்த தீச் சம்பவம் பற்றி புலன் விசாரணையை முடித்திருக்கிறது. கிடைத்திருக்கும் தகவல்களைக் கொண்டு பார்க்கையில் பல விவரங்கள் தெரியவந்தன.
அந்தச் சாதனம் குளியலறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்து கிளம்பிய ஈரப்பதம் காரணமாக மின் ஒழுக்கு ஏற்பட்டு அது அந்தச் சாதனத்தில் பாய்ந்துவிட்டது. இதுவே அந்தச் சாதனத்தில் தீ மூண்டதற்கான காரணங்கள் என்று சாம்சங் நிறுவனம் தனக்கு அனுப்பிய ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. செகார் ரோட்டில் இருக்கும் புளோக் 469ல் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் இந்த மாதம் 9ஆம் தேதி புதன்கிழமை நண்பகல் நேரத்தில் தீச் சம்பவம் நிகழ்ந்ததாக 'ஷின் மின் டெய்லி' சீன நாளிதழ் தெரிவித்தது.
ஈரப்பதம் காரணமாக மின்ஒழுக்கு ஏற்பட்டு தீ மூண்டு சாதனம் இப்படி ஆகிவிட்டதாக சாம்சங் தெரிவித்தது. கோப்புப்படம்: ஷின் மின்