சிங்கப்பூரின் உள்நாட்டு மொத்த வர்த்தகம், 2015 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 13.8% சுருங்கியிருக்கிறது என்று சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை நேற்று தனது ஆகப்புதிய அறிக்கை யில் தெரிவித்தது. மொத்த விற்பனை சரிந்து வரும்போதிலும் ஆண்டுக் காண்டு அடிப்படையில், இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட 20.5% குறைவுடன் ஒப்பிடுகையில், மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட இறக்கம் குறைவாகவே இருந்தது. பெட்ரோலியத்தை நீக்கிவிட்டுப் பார்க்கையில் உள்நாட்டு மொத்த வர்த்தகம் 10.6% சரிந்தது. பெட்ரோலியப் பொருட்கள், ரசாயனப் பொருட்களின் விலை குறைவாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.
விலை மாற்றங்களைச் சரி செய்த பின்னர் பார்க்கை யில், ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த வர்த்தகம் ஆண்டுக் காண்டு அடிப்படையில் 5.1% குறைந்தது. காலாண்டு அடிப்படையில் பார்க்கையில், இந்த வர்த்தகம் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது காலாண்டில் 0.3% குறைந்தது. காலாண்டு அடிப்படையில் பெட்ரோலியத்தை நீக்கிவிட்டுப் பார்க்கையில் மொத்த வர்த்தகம் 1.1% அதிகரித்தது.