இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 120 பேரின் சடலங்கள் காணப்பட்டுள்ளன. 97 பேரின் உடல்கள் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. காயமடைந்தோர் எண்ணிக்கையும் 220 ஆகக் கூடியுள்ளது. இவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் (கான்பூர் சரகம்) ஜகி அகமது கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவ இடத்தில் முகாமிட்டு சிகிச்சைப் பணிகளையும் சீரமைப்புப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். ராணுவ மருத்துவர்கள், ரயில்வே அதிகாரி கள், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில காவல் துறையினர் உள்ளிட்டோர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். "தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.
சிதைந்த ரயில் பெட்டிகளுக்கிடையே பயணிகளைத் தேடும் மீட்புப் பணியினர். கவிழ்ந்த சில ரயில் பெட்டிகள் மட்டும் பாரந்தூக்கிகள் மூலம் நேற்று அகற்றப்பட்டன. படம்: ஏஎஃப்பி