நியூயார்க்: அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள சட்டானூகா நகரில் திங்கட் கிழமை பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து சிறுவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த பேருந்து சாலையோரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்பட்டது. அந்தப் பேருந்தில் வுட்மோர் தொடக்கப்பள்ளிச் சிறார்கள் சுமார் 30 பேர் இருந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த விபத்துப் பற்றித் தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புக் குழுவினர் வாகனத்தின் உள்ளே உடல் சிதைந்த நிலையில் காணப்பட்ட ஐந்து சிறுவர்களின உடல்களை வெளியே கொண்டு வந்தனர். இறந்த சிறுவர்கள் அனைவரும் ஐந்து முதல் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் இச்சம்பவம் சட்டானூகா நகர வாசிகளிடையே சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.
பள்ளிக்கூட பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் வாகனத்தின் உள்ளே சிக்கிய சிறார்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்