சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் ஒன்பது கவச வாகனங்களை ஹாங்காங்கிலிருந்து கொண்டு வரும் பொறுப்பைப் பெற்ற 'ஏபிஅல்' கப்பல் நிறுவனம் தற்போது ஹாங்காங் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தற்காப்பு அமைச்சு நேற்று தகவல் வெளியிட்டது. மேலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று ஹாங்காங் சென்றிருப்பதாக அமைச்சின் அறிக்கை கூறிப்பிட்டது.
வெளிநாட்டுப் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த 9 'டெரெக்ஸ்' கவச வாகனங்கள் ஹாங்காங்கின் சுங்கத்துறையால் நேற்று முன்தினம் 'கவாய் சுங்' கொள்கலக் கப்பல் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. 'ஏபிஅல்' கப்பல் நிறுவனம் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் இணங்க வேண்டும் என்றும் எடுத்துச் செல்லும் அனைத்து உபகரணங்கள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் தேவையான அனைத்து அனுமதிச் சீட்டுகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சு விளக்கியது.