சாதனை வீரர் வெய்ன் ரூனி; வலுவான நிலையில் யுனைடெட்

மான்செஸ்டர்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஹாலந்தின் ஃபயர்னோர்ட் குழு வுக்கு எதிராக ஒரு கோல் போட்டதில் ஐரோப்பியப் போட்டி களில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக ஆக அதிகமான கோல் போட்ட வீரர் எனும் பெருமையை வெய்ன் ரூனி பெற்றுள்ளார். ஃபயர்னோர்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் யுனைடெட் 4=0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யூரோப்பா லீக்கின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அது வலுப்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ரூனி கோல் போட்டார். இதன் மூலம் யுனைடெட்டின் முன்னாள் வீரர் ரூட் வேன் நிசல்ரோயைவிட கூடுதலாக ஒரு கோல் போட்டு உள்ளார். யுனைடெட்டுக்காக ஆக அதிகமாக 249 கோல்களைப் போட்ட போபி சார்ல்ட்டனின் சாதனையை எட்ட ரூனி இன்னும் ஒரு கோல் மட்டுமே போட வேண்டியிருக்கிறது.

யுனைடெட்டின் வெய்ன் ரூனி (வலது) அனுப்பும் பந்து ஃபயர்னோர்ட் கோல்காப்பாளரைக் கடந்து வலை நோக்கிச் செல்கிறது. படம்: ஏஎஃப்பி