ஹவானா: கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும் அந்நாட்டு முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனை அவரது சகோதரரும் கியூபா அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். கியூபாவில் 1959ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி மூலம் ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப் பற்றினார். 1959 முதல் 2008ஆம் ஆண்டு வரை 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக கியூபாவை ஒரு கட்சி அரசாங்கமாக அவர் ஆட்சி செய்தார். கடந்த 2006ஆம் ஆண்டு அவருக்குத் திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்ட தைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் 2008ஆம் ஆண்டு அதிபர் பதவியை தன் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.