உலுசிலாங்கூர்: சிலாங்கூரில் நேற்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு சாப்பாட்டுக் கடையும் பல வாகனங்களும் மண்ணில் புதைந்ததாக அம்மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறினார். உலுசிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள செராண்டா தாமான் இடாமானில் நிலச்சரிவு ஏற்பட்ட போது அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 21 வயது முகம்மது ஃபரீசி சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக பெர்னாமா தகவல் தெரிவித்தது. நிலச்சரிவு பற்றிய தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சிலாங்கூரில் ஒரு மலைக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில் மலையடிவாரத்தில் இருந்த ஓர் உணவுக் கடையும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் மண்ணில் புதைந்தன. அந்த நிலச்சரிவைத் தொடர்ந்து பாதுகாப்பை கருத்தில்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சுமார் 340 பேர் வீடுகளைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. படம்: தி ஸ்டார்