இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அதிரடியாக அறிவித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதனால் இந்திய மக்களுக்குப் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. வங்கிகள், ஏடிஎம்கள் இல்லாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் சொல்ல முடியாதவை. இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளும் போதிய அளவு ரொக்கத் தொகை கிடைக்காமல் சங்கடங்களை எதிர் நோக்கி வருகின்றனர். உணவுத் தொழில் உட்பட பல தொழில்கள் முடங்கியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 39 மாதங்களில் இல்லாத அளவாக 68.86 ரூபாயாக சரிந்துள்ளது. ரொக்கத்தை நம்பியே இந்தியா வின் பெரும்பகுதி பொருளியல் இருப்பதால் இந்தத் திடீர் பணத் தட்டுப்பாடு நாட்டின் பொருளியல் வளர்ச்சியை சில காலத்துக்குப் பாதிக்கும். "உள்நாட்டு உற்பத்தி 2% அல்லது அதற்கு மேலாக குறையும்," என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள்கூட, அதை சரிவர நடை முறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றன. இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டுமென நாடாளு மன்றத்தை ஒரு வாரத்துக்கும் மேலாக அவை முடக்கி உள்ளன. மிக முக்கியமான ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக தீர ஆலோசித்து, யோசித்து முடிவெடுக்காத தன்னிச்சையாகச் செயல்படும் மோடியின் போக்கு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.