மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஒரு குப்பைத் தொட்டிக்குள் சந்தேகத்திற்குரிய ஒரு பொட்டலம் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று போலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் உடனடியாக அவ்விடத்திற்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பொட்டலத்தை வெடிக்கச் செய்ததாக போலிசார் கூறினர்.
பொட்டலத்தை வெடிக்கச் செய்ததால் அவ்விடத்தில் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மட்டுமே ஏற்பட்டதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வழக்கம்போல் பணிகள் தொடர்ந்து நடந்ததாகவும் விசா விண்ணப்பங்களுக்காக ஏராள மான பிலிப்பினோ மக்கள் அங்கு வரிசையில் காத்திருந்தபோது தூதரகம் அருகே அந்தப் பொட்டலம் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே காணப்பட்ட சந்தேகத்திற்குரிய பொட்டலத்தை வெடிக்கச் செய்வதற்காக தண்ணீர் குண்டு ஒன்றை அவ்விடத்தில் வைப்பதில் வெடிகுண்டு அகற்றும் பிரிவின் உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி