அதிமுகவுக்குத் தலைமையேற்கும்படி சசிகலாவிடம் கட்சியின் மூத்த நிர்வாகி களான மதுசூதனன், செங்கோட்டையன், சைதைத் துரைசாமி உள்ளிட்டோர் நேரில் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதியன்று மறைந்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். அடுத்து கட்சியின் பொதுச் செயலா ளர் பதவி யாருக்கு என்பது குறித்து பல்வேறு ஊகங்களும் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்து கட்சிக்குத் தலைமை ஏற்று வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைதைத் துரைசாமி, "அம்மாவிற்கு செவிலித்தாயாகவும் பாதுகாவலராகவும் விளங்கியவர் சசிகலா அம்மையார். கட்சியை வழி நடத்தும் தகுதி அவர்களுக் குத்தான் இருக்கிறது," என்று கூறினார்.
"கட்சிக்கு உடனடியாகத் தலைமை தேவை. 34 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் பழகியவர் என்பதால் சசிகலா தலைமைக் குப் பொருத்தமானவர். அதிமுகவை உடைக்க சதி நடைபெறுவதால் அவர் தலைமையேற்பது அவசியம்," என்று செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் கூறியுள்ளார். இதேபோல, கட்சியின் ஒற்றுமைக்காக சசிகலாவின் தலைமை தேவை என்றும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை உடனிருந்து கவனித்தவரான சசிகலா அவரது திட்டங்களைத் தலைமையேற்று செயல்படுத்த சரியானவர் என்றும் ஆவடி குமார் கூறியுள்ளார்.