குற்றச் செயல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக புதிய குற்றத்தடுப்பு மின்னியல் அறிவிப்புக் கருவிகள் அக்கம்பக் கத்து வட்டாரங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர் போலிஸ் படையின் பிடோக் பிரிவு, மூன்று குற்றத் தடுப்புத் திட்டங்களை நேற்று அறிமுகம் செய்தது. கடைகளுக்கான எல்இடி மின்னியல் அறிவிப்புக் கருவிகள், மின்தூக்கிகளுக்கான மின்னியல் அறிவிப்புப் பலகைகள், மின் கம்பங்களில் பொருத்தப்படும் மின்னியல் அறிவிப்புக் கருவிகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
சமூகத்திடம் சென்றடைய புதுப்புது வழிகளைப் போலிஸ் படை எப்போதும் ஆராய்ந்து வருகிறது என்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள், பயங்கரவாதச் செயல்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் எதிராக விழிப்புடன் இருப்பதற்கு பொதுமக்களை நினைவுபடுத்த உதவும் என்றும் கூறினார் பிடோக் போலிஸ் பிரிவின் துணை ஆணையர் டான் டின் வீ. தெம்பினீஸ் சமூகக் கட்டடத்தில் நேற்று நடந்த போலிஸ் சாலைக் கண்காட்சியில் செய்தியாளர் களிடம் பேசினார் திரு டான்.