நீர்க்காப்பு, பொதுப் பணிகள் நிறுவனத்தின் இயக்குநரான சிங்கப்பூரர் ஒருவர் ஊழல் புரிந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நேற்று 30 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'டிஏசி காண்ட்ரெக்ஸ்' நிறுவனத்தின் இயக்குநரான திரு டோனல்ட் லிங் சுன் டெக், நிர்வாக முகவர்கள், குத்தகையாளர்கள், சொத்து முகவர்கள் போன்ற தனது வாடிக்கையாளர்களுக்கு பொய்யான கட்டணங்களைச் செலுத்தி வந்துள்ளார் என்று லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அவை, குறிப்புக் கட்டணங்கள், தரகுக் கட்டணம், அன்பளிப்புகள் என பொய்யாகக் காட்டப்பட்டு அந்தத் தொகை அவர்களுக்கு ரொக்கமாகவோ தனது விற்பனை ஊழியர்கள் மூலமாகவோ கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத் தின்படி தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் மற்றொரு ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவின்படி சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளையும் லிங் ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கப்படும்போது மேலும் 517 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. "ஊழல், குற்றவியல் நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடு படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் தனது அறிக்கையில் கூறியது.