சுமார் ஓராண்டுக்கு முன் தன்னைத்தானே ஒரு சுற்று சுற்றிவரத் தொடங்கிய இந்த பூமி ஏறக்குறைய இன்னும் ஒரு வார காலத்தில் அந்தச் சுற்றை முடிக்கப்போகிறது. 2016வது சுற்று முடிந்து அடுத்த 2017வது சுற்றுக்குப் பூமி ஆயத்தமாகிவிட்டது நிச்சயம் என்றாலும் உலகில் வாழும் மக்களைப் பொறுத்தவரையில் பலவற்றிலும் நிச்சயமில்லாத நிலையிலேயே அவர்களை விட்டுவிட்டு இந்த ஆண்டு விடைபெறுவதாகத் தெரிகிறது.
எண்ணெய் விலை கிடுகிடு வீழ்ச்சி, உலகப் பொருளி யல் இறங்குமுகம், முதலீடுகள் தேக்கம், வர்த்தகம் சுணக்கம், வேலைவாய்ப்புகள் மந்தம் என்று 2016ல் நிச்சயமில்லாத பாதக நிலையை உலகம் சந்தித்தது; கண்டங்களை எல்லாம் தாண்டி பல நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து வட்டார, உலக, அனைத்துலக அமைப்புகளை ஏற்படுத்தி உலக வர்த்தகத்தை வளர்த்தும் முதலீடுகளைப் பெருக்கியும் வந்த ஓர் அணுகுமுறையில் இருந்து உலகம் விலகிச்செல்லும் ஒரு போக்குக்கு 2016ல் விதை போடப் பட்டுவிட்டது என்ற எண்ணம் உண்டாகக்கூடிய ஒரு சூழல் 2016ல் தலைகாட்டிவிட்டது;
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிக்கொண்டு தனி ராகம் பாடலாம் என்று பிரிட்டன் முடிவு எடுத்தது. இதைவிட இன்னும் ஒருபடி மேலாக, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், அனைத்து ஆசிய பசிபிக் தாராள வர்த்தக உடன்பாட்டில் அக்கறை காட்டாமல் இருதரப்பு உடன்பாடுகளில் நாட்டம் கொள்ளும் போக்கை ஆதரிக்கிறார்; தெற்கு ஆசியாவில் கள்ளப்பணத்தை ஒழிக்கப் போவ தாக அறிவித்து புழக்கத்தில் இருக்கும் பணத்தையும் செல்லாது என்று பிரகடனப்படுத்தி இந்தியா எடுத்த அதிரடி;
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் எங்கும் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கைவரிசைகள்; இந்தோனீசியாவிலும் மலேசியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் வாடை வெளிப்பட்ட சம்பவங் கள்; போக்கிரி நாடு என்று அமெரிக்கா வர்ணிக்கும் வடகொரியா, வெற்றிகரமான முறையில் அணுகுண்டு சோதனையை நடத்திய பயங்கரம்; துருக்கியில் தோல்வி அடைந்த ராணுவப் புரட்சி;
ஆசிய பசிபிக்கில் ராணுவ சமநிலையை மாற்றக் கூடிய அளவுக்குச் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கிளம்பும் தென்சீனக் கடல் பாத்தியத்தை, ஒரே சீனக் கொள்கை பிரச்சினைகள் எல்லாம் 2016ல் இடம்பெற்றன. மனிதர்கள்தான் இப்படி என்றால் புதிதாக 'ஸிக்கா' என்ற ஒருவகை கிருமி ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி போட்ட ஆட்டத்தையும் 2016 கண்டது.