வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் முதியோர் நடமாட உதவும் 'ஈஸ்' மேம்பாட்டுச் செயல்திட்டம் (Ease) ஒன்று அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் பெறுவதற்காக விண்ணப்பித்த குடும்பங்களின் எண்ணிக்கை சென்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி 105,500 ஆக இருந்தது. இந்தச் செயல்திட்டம் 2012ல் தொடங்கப்பட்டது. இதன்படி வீட்டு உரிமையாளர்கள் தங்க ளுடைய அடுக்குமாடி வீடுகளில் முதியோர் நடமாட உதவும் பல வசதிகளை ஏற்படுத்திக்கொள் ளலாம். கைப்பிடிக் கம்பிகளைப் பொருத்துவது, வழுக்காத தரைக்கற்களைப் பதிப்பது, சரிவுப் பாதைகளை அமைப்பது முதலான பலவும் இவற்றில் அடங்கும். இந்தத் திட்டத்திற்குச் சுமார் 42,200 குடும்பங்கள் நேரடியாக விண்ணப்பம் செய்திருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்து இருக்கிறது.
வீட்டு மேம்பாட்டுச் செயல் திட்டத்தின் (HIP) வழியாக இதர 63,300 குடும்பங்கள் இந்த வசதிகளைப் பெற விண்ணப்பித்து இருக்கின்றன. இத்தகைய வசதிகளைப் பெற்றுள்ளவர்களில் சிம் கோக் கெங் என்ற 72 வயது முதியவரும் ஒருவர். வீட்டில் ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வரும் இவர், தனக்கு கழிவறைக்குச் சென்று வருவது இப்போது மிகவும் வசதியாக இருப்பதாக கூறுகிறார்.