கிறைஸ்சர்ச்: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியுள்ளது. இந்த ஆட்டம் நேற்று கிறைஸ்சர்ச் நகரில் நடைபெற்றது. முதலில் பந்தடித்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் டோம் லாதம் சதம் அடித்தார். அவர் 121 பந்துகளில் 137 ஓட்டங்களும் (7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) கோலின் மன்ரோ 61 பந்துகளில் 87 ஓட்டங்களும் (8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
பின்னர் பந்தடித்த பங்ளாதேஷ் 264 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் நியூசிலாந்து அணித் தலைவர் வில்லியம்சன் 4,000 ஓட்டங் களைக் கடந்தார். இந்த இலக்கை வேகமாகக் கடந்த (96வது இன்னிங்ஸ்) ஐந்தாவது வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். தென்னாப்பிரிக் காவின் ஆம்லா 4,000 ஓட்டங் களை 81 ஆட்டங்களில் கடந்து முதல் இடத்தில் உள்ளார்.
பங்ளாதேஷ் அணியின் முஷ்ஃபிகுர் ரஹ்மான் (இடது) அடிக்கும் பந்தைப் பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சி செய்யும் நியூசிலாந்தின் விக்கெட்காப்பாளர் லியூக் ரோஞ்சி (வலது). படம்: ஏஎஃப்பி