யாஸ்மின் பேகம்
'நிமிர்ந்த நன்னடை' என்ற பாரதியாரின் கூற்றையெல்லாம் மறக்கடித்து கைபேசி, கைக் கணினிகளைப் பார்த்த வண்ணம் சாலைகளைக் கடந்தது, இரவு பகல் பாராமல் சிங்கப்பூரின் பல இடங்களுக்கும் இளையரை அலைய வைத்தது என இவை அனைத்தையும் சாத்தியமாக்கியது 'போக்கிமோன் கோ' விளையாட்டு. சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் 'போக்கிஸ்டாப்'கள் இருந்ததால் அங்கெல்லாம் சென்று 'போக்கிமோன்'களைத் தேடித் திரிந்தனர் இளையர்கள்.
சிறு வயதில் 'போக்கிமோன்' கேலிச் சித்திரத்தை விரும்பிப் பார்த்த தினேஷ்குமார் தனபாலன், 24, "இந்த விளையாட்டு இளம் பருவத்தை நினைவூட்டியது. பலவிதமான போக்கிமோன்களைப் பிடித்து அவற்றைக் கொண்டு மற்றவர்களுடன் சண்டையிட்டு வெல்லும் ஆவலில் பலர் இவ் விளையாட்டில் ஈடுபட்டனர். சிலர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து போக்கிமோன்களைத் தேடிப் பிடித்தனர்," என்றார்.
ஹவ்காங் அவென்யூ 10ல் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அருகில் இரவு நேரத்தில்கூட காத்திருந்து போக்கிமோன்களைப் பிடித்தது இளையர் கூட்டம். அப்பகுதிக்கு போலிஸ் காவல் போடுமளவுக்கு நிலைமை உருவானது.