பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் இரு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 53 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். கார் உதிரிப் பாகங்களை விற்பனை செய்த கடைகளுக்கு அருகே நேற்று இரு குண்டுகள் வெடித்ததாக போலிசார் கூறினர். ஒன்று தற்கொலைத் தாக்குதல் என்றும் மற்றொன்று வெடிகுண்டு தாக்குதல் என்றும் ஈராக்கிய உள்துறை அமைச்சு அதிகாரிகள் கூறினர்.
அவ்விரு குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாக்தாத்தில் பொது இடங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களைக் குறிவைத்து ஐஎஸ் போராளிகள் அண்மைய காலமாக தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொள்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்