புதுவை: மொட்டை மாடியில் பேசிகொண்டிருந்தபோது கைபேசியில் தீப்பிடித்து மாணவன் உடல் கருகி பலியான சம்பவம் புதுவை யில் பரபரப்பையும் சோகத் தையும் ஏற்படுத்தி உள்ளது. கைபேசியில் தீப்பிடித்த தற்கான காரணம் தெரிய வில்லை. பெங்களூருவைச் சேர்ந்த விமானப் படை முன்னாள் ஊழியரான ராஜேஷின் 15 வயது மகன் அபினாஷ் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில், கிறிஸ்து மஸ் பண்டிகைக்காக தமது குடும்பத்தினருடன் சொந்த ஊரான புதுவைக்குச் சென்றிருந்தார் ராஜேஷ். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பகல் வேளையில், தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று கைபேசி வழி நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் அபினாஷ்.
அப்போது, திடீரென அந்த கைபேசியில் தீப்பிடித் துள்ளது. இதனால் அலறிய டித்தபடி தன் கையை அபினாஷ் உதற, கைபேசி அவரது சட்டையின் மீது பட்டது. இதனால் அடுத்த நொடியே அவரது உடையில் தீப்பற்றிப் பரவியது. இதனால் அபினாஷ் அலறித்துடிக்க, அதைக் கேட்ட அவரது குடும்பத்தி னர் பதறியடித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு விரைந் தனர். பின்னர் அபினாஷ் உடலில் பற்றிய தீ அணைக் கப்பட்டது. படுகாயமடைந்த மகனை புதுவை மருத்துவமனை யில் பெற்றோர் சேர்த்த நிலையில், தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அபினாஷ் பரிதாபமாக இறந்தார்.