புளோரிடா: அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல்ட் டிரம்ப், தாம் பதவியேற்ற பிறகு தைவான் அதிபர் அமெரிக்காவுக்கு வருகை அளித்தால் அவரைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார். ஜனநாயகக் கட்சி அலுவலர்களின் கணினிகளுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியதற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறப்படுவது குறித்து தாம் ஐயுறுவதாகவும் அவர் சொன்னார்.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை நேரக் கொண்டாட்டங்களில் பங்கேற்கச் சென்ற போது செய்தியாளர்களைச் சந் தித்த திரு டிரம்ப் இந்தத் தகவல் களைத் தெரிவித்தார். சென்ற ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு தொலைபேசி வழியாக தைவான் அதிபர் வாழ்த்துத் தெரிவித்ததை அறிந்த சீனா சீற்றம் கொண்டதுடன் 'ஒரே சீனா' கொள்கைக்கு எதிராக நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது எனவும் எச்சரித்தது.