ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகர்த்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள 'தௌசண்ட் ஐலண்ட்ஸ்' தீவுகளுக்கு சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகில் தீப்பற்றியதில் 23 பேர் பலியாகினர். சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற அந்தப் படகிலிருந்து 200க்கும் அதிகமானோர் மீட்கப் பட்டுள்ளதாக நேற்று மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு ஜகார்த்தாவில் உள்ள மௌரா அங்கீ துறைமுகத் திலிருந்து நேற்று அதிகாலை கிளம்பிய 'ஸஹ்ரோ எக்ஸ்பிரஸ்' படகின் மின்னாக்கியில் தீப்பற்றியதால் படகு தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்டது.
"அடர்ந்த கருமையான புகை திடீரென எழும்பி படகைச் சூழ்ந்தது," என்று விபத்திலிருந்து தப்பிய ஆர்டி என்பவர் கூறி யுள்ளார். அவருக்கு ஜகார்த்தா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. "படகில் இருந்த அனைத்துப் பயணிகளும் அலறியடித்துக் கொண்டு தங்களது உயிர்காப்பு மிதவைகளை நீருக்குள் போடத் தொடங்கினர். ஆனால் கண் ணிமைக்கும் நேரத்தில் எரி பொருள் சேமிப்புப் பகுதியிலிருந்து தீ பெரிதாகக் கிளம்பியது," என்றார் ஆர்டி.
ஜகார்த்தாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மௌரா அங்கீ துறைமுகத்தில் இருந்து 248 பயணிகளுடன் தௌசண்ட் ஐலண்ட்ஸை நோக்கி பயணமான படகில் தீ விபத்து ஏற்பட்டதில் படகு முற்றிலும் எரிந்து கரிக்கட்டை ஆனது. இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 17 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன. படம்: ராய்ட்டர்ஸ்