லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த குழு என்ற பெருமையை ஆர்சனலுடன் பகிர்ந்து கொண்டது செல்சி காற்பந்துக் குழு. 2001-02 பருவத்தில் ஆர்சனல் குழு தொடர்ந்து 13 ஆட்டங்களில் வென்று இருந்தது. இப்போது அன்டோனியோ கோன்டே நிர்வாகத்தின்கீழ் விளையாடி வரும் செல்சி குழு, நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிட்டியை வீழ்த்தியதன் மூலம் அந்தச் சாதனையைச் சமன்செய்தது.
செல்சி இருமுறை முன்னிலைக்குச் சென்றபோதும் தளராத ஸ்டோக் சிட்டி வீரர்கள் பதில் கோலடித்து அதை ஈடு கட்டினர். ஆனாலும், விடாமுயற்சியுடன் போராடி மீண்டும் முன்னிலை பெற்று வெற்றியைத் தன்வசமாக்கியது செல்சி. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் கேரி கேஹில் தலையால் முட்டி அடித்த கோல் மூலம் தனது கோல் வேட்டையை செல்சி தொடங்கியது. இடைவேளையின்போது அதே முன்னிலை நீடித்தாலும் பிற்பாதியின் முதல் நிமிடத்திலேயே பந்தை வலைக்குள் தள்ளி ஸ்டாம்ஃபோர்ட் அரங்கில் திரண்டு இருந்த செல்சி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் ஸ்டோக் சிட்டி வீரர் புருனோ மெண்டிஸ்.
ஸ்டோக் சிட்டிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சக செல்சி ஆட்டக்காரர் வில்லியன் கோல் போட உதவியதன் மூலம் இபிஎல் காற்பந்தில் 100 கோல்களைப் போட உதவிய நான்காவது வீரர் என்ற பெருமையுடன், குறைந்த போட்டிகளில் (293) அதை நிகழ்த்திக் காட்டியவர் என்ற சாதனையையும் படைத்தார் செஸ்க் ஃபேப்ரிகாஸ் (வலது). முந்தைய போட்டியில் போர்ன்மத் குழு ஆட்டக்காரர் ஜாக் வில்சியருடன் பந்துக்கு மல்லுக்கட்டிய ஃபேப்ரிகாஸ். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்