லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு 13 முறை இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளபோதும் நிர்வாகிப் பதவியில் இருந்து சர் அலெக்ஸ் ஃபெர்குசன் ஓய்வுபெற்ற பிறகு அக்குழு தடுமாறி வருகிறது. இந்நிலையில், அந்தக் குழு 2015 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் வென்று, எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. நேற்று பின்னிரவு நடந்த ஆட்டத்தில் அக்குழு 2-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை வீழ்த்தியது.
15வது நிமிடத்திலேயே வெஸ்ட் ஹேம் யுனைடெட் வீரர் சோஃபியன் ஃபெகூலி சர்ச்சைக்குரிய வகையில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, 63வது நிமிடத் தில் யுவான் மாட்டாவும் 78வது நிமிடத்தில் ஸ்லாட்டன் இப்ராகி மோவிச்சும் ஆளுக்கொரு கோல் அடித்து மேன்யூவின் வெற்றியை உறுதி செய்தனர். "சிவப்பு அட்டை காட்டப்பட்டு இருக்கவே கூடாது," என்று ஆட்டம் முடிந்தபிறகு சொன்னார் வெஸ்ட் ஹேம் நிர்வாகி ஸ்லேவன் பிலிச். "இரு தரப்பிலிருந்தும் வந்த சவால் அது. தவறிழைத்தது மேன்யூ வீரர் ஃபில் ஜோன்ஸ்தான். இந்த முக்கியமான முடிவு ஆட் டத்தில் எங்களைப் பலிகொண்டு விட்டது," என்றார் பிலிச்.
வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவிற்கு எதிரான இபிஎல் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் யுவான் மாட்டா (நடுவில்). இந்த ஆட்டத்தில் தன்னுடைய ஆட்டக்காரர் ஒருவரைச் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றியது தவறான முடிவு என்று வாதிட்ட வெஸ்ட் ஹேம் நிர்வாகி பிலிச், பின்னர் மேன்யூ வீரர் இப்ராகிமோவிச் 'ஆஃப்சைட்' நிலையில் இருந்து கோலடித்ததை நடுவர் கண்டுகொள்ளாமல் விட்டதும் தம் குழுவைக் கொன்றுவிட்டது என்றார். இந்நிலையில், நடுவர் தவறிழைப்பதெல்லாம் இயல்புதான், தோல்விக்கு அதைக் காரணம் காட்டக் கூடாது என்றார் மேன்யூ நிர்வாகி மொரின்யோ. படம்: ஏஎஃப்பி