கம்மானாஹாலி என்ற குடியிருப்புப் பகுதியின் ஐந்தாவது தெருவில் கடந்த 2ஆம் தேதி இரவு சுமார் 10.40 மணியளவில் ஒரு இளம்பெண் ஆட்டோ ரிக் ஷாவில் இருந்து இறங்கி அருகில் உள்ள தனது வீட்டை நோக்கி தன்னந் தனியாக நடந்துசெல்கிறார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு நண்பர்கள் அவரை கடந்து செல்கின்றனர். பின்னர் சற்று தூரம் சென்றதும் அந்த வாகனம் ஒரு வீட்டின் முன்னால் நிற்கிறது. அதற்குள் நடந்து வந்துகொண்டிருந்த பெண் அந்த வாகனத்தை நெருங்கும்போது அவரை நோக்கி ஓடிச் செல்லும் ஒருவன், அந்தப் பெண்ணைப் பலவந்தமாகக் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயற்சி செய்கிறான்.
இதற்கு இணங்காமல் போராடும் பெண்ணின் கன்னத்தில் அறைந்து வாகனத்தில் அமர்ந்திருக்கும் தனது நண்பனும் அவருக்கு தொல்லை தர ஏதுவாக அந்தப் பெண்ணை நண்பனிடம் இழுத்துச் செல்கிறான். இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் மற்றொருவனும் அந்தப் பெண்ணைத் தொல்லைக்கு உள்ளாக்குகிறான். அவனிடம் இருந்து தப்பியோட முயலும் அந்த இளம் பெண்ணை முழு பலத்தோடு எட்டி உதைக்கும் முதல் இளைஞன், வாகனத்தில் ஏறி தனது நண்பனுடன் தப்பிச் சென்று விடுகிறான். சுற்றிலும் வீடுகள் நிறைந்துள்ள அந்தத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காணிப்பு புகைப்படக் கருவியில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்கள் மூலம் வெகு வேகமாகப் பரவி வருகின்றன.